சமீப பதிவுகள்

நபி(ஸல்) அவர்களை அவமதிப்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டக்கூடிய  ஃபிரான்ஸ் வார இதழின் நடவடிக்கை பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற ஃபிரான்ஸ்‎ பத்திரிக்கை கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளது. கடந்தவாரம் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களில் 12 பேர்கள் முகமூடி அணிந்த போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலளிப்பாக மீண்டும் கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது! கடந்த சில வருடங்களாக நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வரையும் நடவடிக்கைகளில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முன்னணியில் இருந்துவருகிறது.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களின் கொலை பற்றி உணர்ச்சி மேலிட விவாதம் மேற்கொண்ட பத்திரிக்கைகளும் செய்தி ஊடகங்களும் பேச்சு சுதந்திரம் (Freedom of speech) தொடர்பான முஸ்லிம்களின் உடன்பாடற்ற மனநிலை குறித்து கேள்வி எழுப்பின! முஸ்லிம்கள் எதிர்செயல்பாடு கொண்டவர்கள் என்றும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்றும் சுதந்திரம் என்ற சிந்தனையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல என்றும் அவை குற்றம் சுமத்தின!

முஸ்லிம்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

மேற்குலகின் ஜனநாயக மதச்சார்பின்மைவாதிகள்தான் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தூ£ண்டிவிட்டு வருகிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on Terror) என்ற கோஷத்தை முன்வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் திட்டத்தில் மேற்குலகம் எத்தகைய நடிவடிக்கையையும் விட்டுவைக்கவில்லை.

செப்டம்பர் 11 க்கு பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஆக்கிரமிப்புகள் என்று பல்வேறு இடர்பாடுகளை தங்களுடைய ஈமானின் நிமித்தம் முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். இஸ்லாமிய நிலப்பரப்புகளை வெறித்தனமாக ஆக்கிரமித்ததார்கள்! அபூகுரைப் மற்றும் குவான்டனாமோ சிறைகளில் முஸ்லிம்களிலுள்ள ஆண்களையும் பெண்களையும் அடைத்துவைத்து கொடூரமாக சித்ரவதை செய்தார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டார்கள்! நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் கண்ணியமிக்க மனைவியரையும் இழிவுபடுத்தும் வகையில் புத்தகங்களை வெளியிட்டார்கள்! புனிதமிக்க குர்ஆனை இழிவுபடுத்ததினார்கள்! ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தார்கள்! ஸ்வீடன் நாட்டில் மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டுவதற்கு தடைவிதித்தார்கள்! மேலும் இதுபோன்று இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எண்ணற்ற அநீத செயல்பாடுகளை கட்டவிழ்த்து வருகிறார்கள்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அனுப்பிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக இருக்கிறார்கள் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்கு முற்றிலும் முரண்பாடாக, மேற்குலக மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல், இழிவுபடுத்துதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லிம்கள் சுதந்திரத்தை மதிப்பதில்லை என்று மேற்குலகவாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

மதச்சார்பின்மை‎‎க்கும் மக்களாட்சிக்கும் பாதுகாவலன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஃபிரான்ஸ் அரசு சமீபத்தில் முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும் தடைவிதித்துள்ளது! எனினும் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதுகின்ற மாண்புமிக்க விவகாரங்களை காஃபிர்கள் தொடர்ந்து இழிபடுத்துவதை எதிர்க்கும்வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால், முஸ்லிம்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும் எதிர்மறை செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்!

ஸவ்பான்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

உணவருந்தும்போது ஒருவர் மற்றொருவரை விருந்திற்கு அழைப்பது போல் உங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மக்கள் விரைவாக மற்றவர்களை அழைப்பார்கள். ‘அந்நாட்களில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாக இவ்வாறு நிகழுமா?’ என்று ஒருவர் வினவினார். ‘இல்லை! அப்போது நீங்கள் திரளான எண்ணிக்கையில் இருப்பீர்கள், எனினும் கடல்நீரில் அடித்துச் செல்லப்படும் நுரை போன்று இருப்பீர்கள்! உங்கள் எதிரிகளின் உள்ளங்களில் உங்கள் மீதுள்ள அச்சத்தை அல்லாஹ் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் ‘வஹ்னை’ போட்டுவிடுவான்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று ஒருவர் வினவினார். ‘உலகத்தின் மீதுள்ள பற்று மற்றும் மரணத்தின் மீதுள்ள வெறுப்பு’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

                                                                                                           (அபூதாவூது, அஹ்மது)‎‎‎‎‎‎‎‎
இன்றைய முஸ்லிம்களின் உண்மைநிலை குறித்து இந்த ஹதீஸ் தெளிவாக விவரிக்கிறது, 170 கோடி மக்கள் தொகையையும் பெட்ரோலியம், நிலவாயு போன்ற அரிய இயற்கை வளங்களையும் பெருங்குவியலாக பெற்றிருந்தபோதும் இன்றைய முஸ்லிம்களுக்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை! அவர்கள் கடலின் நுரையைப் போன்ற சிறுமையடைந்து கிடக்கிறார்கள்!

இதற்குரிய தீர்வுதான் என்ன?

ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமாகவோ அல்லது ஃபிரான்ஸ் அரசுத்தூதருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலமாகவோ இந்த விவகாரத்திற்கு தீர்வு ஏற்படுத்தமுடியாது; மாறாக இத்தகைய விவகாரங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டபோது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அவற்றிற்கு எவ்வாறு தீர்வுகண்டார்கள் என்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும். சத்தியத்திற்கும் & அசத்தியத்திற்கும், இஸ்லாத்திற்கும் & குஃப்ருக்கும் எதிரான இப்போர் புதிதானதல்ல! இந்த தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக நடத்தப்படும் போரின் வெளிப்பாடாகவே இருக்குகிறது. கடந்த 19 ம் நூற்றாண்டில் முஸ்லிம்களுடைய ஈமானுக்கு எதிராக காஃபிர்கள் தாக்குதல் நடத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களுடைய கண்ணியமிக்க மனைவி ஆயிஷா(ரளி) அவர்களையும் கேலி செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சித்தார்கள்! இதற்கு பதிலளிப்பாக அன்றைய முஸ்லிம்களின் கலீஃபாவாக இருந்த அமீருல் மூஃமினீன் இந்த இழிசெயலை மேற்கொண்ட நாடுகளின் அரசுத்தூதர்களை அழைத்து அந்த நாடகத்தை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தார், உடனடியாக அவை கலீஃபாவின் எச்சரிக்கைக்கு அஞ்சி தங்களுடைய நடவடிக்கையை நிறுத்திவிடுவதாக கூறிவிட்டன! அந்நாடுகள் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகியவையாகும்!

கிலாஃபா ஆட்சியின்கீழ் பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் ஒன்றாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள், அதில் சிறுபான்மையினர் நசுக்கப்படவில்லை, ஏழைகள் கவனிப்பின்றி விட்டுவிடப்படவில்லை! உண்மையாகவே முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிருஸ்த்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் ஆகியோர் கிலாஃபா அரசின்கீழ் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு வரலாறே சான்றாக திகழ்கிறது.

பிரிட்டன் மற்றும் காலனியாதிக்க மேற்கத்திய அரசுகளின் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில்தான் முஸ்லிம்களின் நிலப்பரப்புகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டன! ஒற்றுமையாக வாழ்ந்துவந்த பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் மத்தியில் பரஸ்பர வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு ஓரிரவில் அவர்கள் எதிரிகளாக ஆக்கப்பட்டர்கள்!

கண்ணியமிக்க முஸ்லிம்களே!

நாம் மிகச்சிறந்த சமுதாயம் என்பதை நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும், மேற்கத்தியர்கள் நிச்சயமாக இதை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பெரும் திட்டங்களை தீட்டி செயலாற்றியபோதும் நம்மை சிறிதும் பலவீனப்படுத்த முடியவில்லை! எனவே நாம் உயிரினும் மேலாக கருதுகின்ற நமது இந்த விவகாரத்தில் இப்போது அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! ஆம்! நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் அல்லாஹ்வின் வேதத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த துணிந்துள்ளார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் தீட்டுவதை நாம் கண்டித்தால் அவர்கள் மேலும் அதுபோன்ற கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டு வருகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை கழிவறையில் வீசியெறிகிறார்கள்! அதை தீயிட்டு கொளுத்துகிறார்கள்! இந்த இழிவான நடவடிக்கைகள் வாயிலாக நம்முடைய இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் இறை வேதத்தின் மீதும் நாம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

கிலாஃபா எனும் உண்மையான தலைமை இல்லாவிடில் நாம் மிகநெருக்கடியான சூழலில் தள்ளப் பட்டுவிடுவோம் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபாதான் நம்முடைய கண்ணியத்தையும், சிறைபட்டுக் கிடக்கும் நம்முடைய சகோதரர்களையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது நிலங்களையும் நமது மஸ்ஜிதுகளையும் திரும்பவும் மீட்டுக்கொடுத்து இஸ்லாமிய மாண்புகளை அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை அமைப்பதற்கு ஆற்றல்பெற்றது. இஸ்லாத்தின் கண்ணியத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க அது போராடும்!

இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும்!

நமது இருப்பிடங்களில் அமர்ந்துகொண்டு முஸ்லிம் உலகத்தின் இக்கட்டான நிலையை செய்திஊடகங்களில் பார்த்து துயரங்கொள்வதால் மட்டும் எத்தகைய பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக எந்த நிலப்பரப்பில் நாம் இருந்தபோதும் இணைந்து செயலாற்றி நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

மேற்கத்தியர்களின் அச்சுறுத்தல்கள், நமது சகோதரர்களும் சகோதரிகளும் எதிர் கொண்டுள்ள இன்னல்கள் துயரங்கள், நமது இஸ்லாமிய நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்புகள், வாழ்வியலில் நாம் அடைந்துள்ள பின்னடைவு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரேயொரு தீர்வுதான் நமக்கு முன்பாக இருக்கிறது! ஆம்! ஒரே தலைமையின்கீழ் நாம் ஒன்றிணைய வேண்டும்! மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி செலுத்துவதற்கு திறன்பெற்ற செயலாக்க அமைப்பின்பால் நாம் ஒன்றிணையவேண்டும்! நமக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும் கீழ்நிலையிலிருந்தும் விடுபட வேண்டுமென்றால் நாம் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்! ஆம்! கிலாஃபத்திற்காக விடுக்கப்படும் அழைப்பில் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்!

எனவே நமது கட்டாயக்கடமை என்னவென்றால்,

நமது உம்மத்தை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவையும் அது பற்றிய விழிப்புணர்வையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இந்த குறிக்கோளுக்கான ஹுகும்களையும் தீர்வுகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

அல்லாஹ் அருளியுள்ள ஷரீஆவை நிலைநாட்டுவதற்காகவும் முஸ்லிம்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அழைப்புவிடுக்கும் உலக முஸ்லிம் சகோதரர்களுடன் நாம் இணைந்து நிற்கவேண்டும்.

நமது சகோதர சகோதரிகளுக்காகவும் அல்லாஹ்வின் உதவிக்காகவும் நாம் துஆ செய்யவேண்டும்.

இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்குரிய தீர்வு என்பது நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபா எனும் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதுதான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அது முஸ்லிம்களின் கேடயமாகும்! அதுவே தீனுடைய பாதுகாப்பாகும்! அதுதான் இஸ்லாத்தின் சின்னமாகவும் அதன் அச்சாணியாகவும் விளங்குகிறது! இன்னும் முஸ்லிம்களின் வாழ்வாகவும் அவர்களுடைய கண்ணியமாகவும் உடமையாகவும் விளங்குகிறது!

ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்  உங்களுக்கு வாழ்வளிக்கும் விஷயத்தை நோக்கி அழைப்பு விடுத்தால் அதற்கு பதிலளியுங்கள்!                                                 (அல்அன்ஃபால் : 24)

கர்பலா சம்பவம் தரும் படிப்பினை

யா அல்லாஹ் எனக்கு நிகழும் அனைத்து துன்பங்களிலும் நான் உன்னிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்!அனைத்துவிதமான வன்முறையின் இடையே நீயே எனது நம்பிக்கையாக இருக்கின்றாய்! நீயே எனது அடைக்கலமாகவும் அனைத்தையும் வழங்குபவனாகவும்  இருக்கின்றாய்! எத்துனை துயரங்கள் எனது இதயத்தை பலஹீனப்படுத்தியது; அதை எதிர்கொள்ள எந்தவொரு வழிவகையும் இன்றி என்னை நிராயுதபாணியாக்கியது; அச்சமயம் என் தோழர்கள் என்னை கைவிட்டனர்; எதிரிகள் எள்ளி நகையாடினர்; நான் என்னுடைய விவகாரங்களை உன்னிடமே சமர்ப்பிக்கின்றேன்! மேலும் உன்னிடமே புகார் செய்கின்றேன்! ஏனென்றால் என்னுடைய விருப்பமாக நீயே இருக்கின்றாய்! நீ  என்னை இந்த சூழலில் இருந்து விடுவிப்பாயாக! மேலும் அதை என்னிடமிருந்து அகற்றி விடுவாயாக! நீயே கருணையாளர்களின் எஜமானன்! நன்மையின் சாராம்சமாகவும் அனைத்து விருப்பத்திற்குமான இறுதி இடமாகவும் நீ இருக்கின்றாய்! “

இது, இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் யஸீத் இப்னு முஆவியாவின் படையினரின் கரங்களால் ஷஹீதாவதற்கு  முன்னர் கேட்கப்பட்ட உருக்கமான துஆ ஆகும்.

சில குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் ஒரு சமுதாயத்தின் உணர்ச்சிகளுக்கு வடிவம் தருகிறது;விருப்பங்களை தூண்டும் கணங்கள் மற்றும் அந்த நிகழ்வானது மனிதர்களின் விதியை உருவகப்படுத்தும் மனோபாவங்களை உருவாக்குகிறது. கர்பலாவில் நடந்த படுகொலையும் அது போன்ற ஒரு நிகழ்வாகும். உலகளாவிய முஸ்லிம்கள் இந்த முஹர்ரம் மாதத்தில் இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களின் துணிச்சலை நினைவு கூறும் சமயம், நாம் கர்பலா நிகழ்வு தரும் படிப்பினையை புரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆட்சி கட்டிலிற்கு வாரிசு

முஆவியா (ரலி) அவர்கள் தனது கிலாஃபத்தின் இறுதி கட்டத்தை நெருங்கியபோது முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்ட பாரசீகத்தினரிடம் உள்ள சில நடைமுறையில் இருந்த கருத்துக்களின் தாக்கம் அவருக்கு ஏற்பட்டது. உதாரணமாக பரம்பரை ஆட்சிமுறை எனும் கருத்து முக்கியமானதாகும். எனவே முஆவியா(ரலி) அவர்கள் பரம்பரை ஆட்சிமுறையை இஸ்லாத்தின் அமைப்பில் அறிமுகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். நாட்டின் தலைமைத்துவம் என்பது  மன்னராட்சி முறை போன்றது என்ற புரிதலை கொண்டிருந்ததால் இந்த முயற்சியை மேற்கொண்டார்.இஸ்லாத்தில் பட்டத்து இளவரசர் முறை இல்லாதபோதிலும் தன்னுடைய மகன் யஸீதை பட்டத்து இளவரசராக முடிசூட்ட முயன்றார்.

இப்னு கஸீர் மற்றும் இப்னு அல்-அஸீர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் அறிவிப்பதாவது:-

முஆவியா(ரலி) அவர்களின் ஆளுநர்களால் ஹிஜாஸில்  யஸீதிற்கு பைஆ வாங்க முடியாமல் போனதால், பணக்குவியல் மற்றும்  படையினருடன் நேரடியாக அங்கு சென்றார்.அங்குள்ள செல்வாக்குமிக்க முக்கிய நபர்களை வரவழைத்து அவர்களிடம் இவ்வாறு கூறினார்:-

 ”உங்களிடம் நான் மேற்கொண்டுள்ள நடத்தையை பற்றியும் உங்கள் மீதுள்ள எனது குடும்ப உறவு பற்றியும் உங்களுக்கு தெரியும்; யஸீத் உங்களுடைய சகோதரர் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். யஸீதை கலீஃபாவாக நியமிக்க உங்களது முன்மொழிதலை வேண்டுகிறேன்.ஏனென்றால் உங்களிடமே ஒருவரை நியமிக்கவும்  நீக்கவும் அதிகாரம் உள்ளது. மக்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்தவும் நிதிகளை வசூலித்து பங்கீடு செய்யவும் அதிகாரம் பெற்ற மக்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்.”

இதற்கு அப்துல்லா இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் கூறியதாவது;-

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தனக்கு பின்னர் யாரையும் நியமிக்கவில்லை என்பதால்  தாங்கள் நபி(ஸல்) அவர்கள் பின்பற்றிய வழிமுறையை தேர்ந்தெடுங்கள்; இல்லையெனில் அபுபக்கர்(ரலி) அவர்கள் என்ன செய்தார்களோ, அல்லது உமர்(ரலி) அவர்கள் என்ன செய்தார்களோ அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்”

இதைக் கேட்ட முஆவியா(ரலி) அவர்கள் கோபமடைந்து அங்கு குழுமியிருந்த மற்றவர்களின் கருத்தை கேட்டார்கள். அவர்களும் அப்துல்லா இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் கருத்தையே ஆமோதித்தார்கள். இந்த விவகாரத்தில் முஆவியா(ரலி) கூறியதாவது:-

 ”நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள்! நான் ஒன்றை கூறப்போகிறேன்; அல்லாஹ்வின் மீது ஆணையாக யாராவது என்னுடைய பேச்சிற்கு மறுபேச்சு பேசினால் அவருடைய கழுத்தில் வாள் தொடுவதற்கு முன்னால் மறுபேச்சு பேசமுடியாது; ஆகையால் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்”.

 பின்னர் தலைமை பாதுகாப்பு அதிகாரியிடம், ஹிஜாஸின் ஒவ்வொரு செல்வாக்கு மிக்க முக்கிய பிரமுகர் மற்றும் எதிர்ப்பவர்கள் அனைவரின் பின்புறம் இரண்டு வீர்ர்களை நிறுத்தி வைத்து யாராவது எதிர்த்து பேசினால் அவரது தலையை வாளால் துண்டிக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் மிம்பர் படியில் ஏறி நின்று இவ்வாறு கூறினார்:-

“இந்த கூட்டத்தில் உள்ள மக்கள் தலைவர்களாகவும் முஸ்லிம்களில் சிறந்தவர்களாகவும் உள்ள இவர்களன்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதில்லை;  இவர்களின் ஆலோசனை இன்றி எந்த பிரச்சினையும் தீரக்கப்படுவதில்லை. இவர்களிடம் ஆலோசிக்கப்பட்டது; பின்பு இவர்கள் பைஆ கொடுத்துவிட்டனர்; ஆகவே அல்லாஹ்வின் பெயரால் நீங்களும் பைஆ கொடுங்கள்.”

இந்த அடிப்படையில் பட்டத்து இளவரசரை நியமிக்கும் முறையை முஆவியா(ரலி) ஏற்படுத்தினார். எனினும் அனைத்து சஹாபாக்களும் ஒட்டுமொத்தமாக இதை ஏற்றுக்கொள்ளவில்லை.உமர்(ரலி) அவர்கள் மேற்கண்ட அடிப்படையில் ஆட்சியாளரை நியமிப்பது தொடர்பாக இவ்வாறு கூறியுள்ளார்கள்:-

 ”ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு அவருடைய உறவின் காரணமாகவோ அல்லது தோழமையின் காரணமாகவோ முஸ்லிம்களில் அவரைவிட அதிக தகுதியுடைய முஸ்லிம் ஆண் ஒருவர் இருக்க, அதிகாரத்தை முந்தையவருக்கு கொடுப்பாரேயானால் அவர் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் முஃமினீன்களுக்கும் துரோகம் செய்தவராவார்.”

முஆவியா(ரலி) அவர்கள் 75ஆவது வயதில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹிஜ்ரி 60ல் ரஜப் மாதத்தின் மத்தியில் வஃபாத் ஆனார்கள்.

கர்பலாவிற்கான பாதை

இமாம் ஹஸன்(ரலி) அவர்கள் முஆவியா(ரலி) அவர்களுக்கு முன்னரே வஃபாத் ஆன காரணத்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவானது. யஸீத் இந்த சூழலை சாதகமாக எடுத்துக்கொண்டு முஆவியா(ரலி) அவர்களால் மதீனாவிற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட வலீத் பின் உத்பா பின் அபூ சுஃப்யான் அவர்களுக்கு இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களிடம் பைஆ கோருமாறும், அவ்வாறு அவர் தர மறுத்தால் அவருடைய தலையை வேண்டியும் கடிதம் எழுதினார். இவ்விவகாரமாக ஹுஸைன் (ரலி) அவர்களை சந்தித்து பேச வலீத் அழைத்தார். அச்சந்திப்பில் ஹுஸைன்(ரலி) அவர்கள் எந்தவொரு வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.மேலும் தனது குடும்பத்தாருடன் மதீனாவை விட்டு வெளியேறி மக்காவிற்கு செல்ல முடிவெடுத்தார்கள்.

 ஹுஸைன்(ரலி) அவர்கள் மக்கா வந்தடைந்தவுடன் கூஃபா சென்று கலீஃபாவாக நியமனம் பெற கூஃபாவாசிகலிடமிருந்து  கடிதங்கள் வந்தன.எனவே ஹுஸைன்(ரலி) தனது ஒன்றுவிட்ட சகோதரரான முஸ்லிம் பின் அகீலை தூதுவராக ஈராக்கிற்கு அனுப்பி அங்குள்ள சூழ்நிலையை முதலில் தெரிந்துகொள்ள அனுப்பி வைத்தார். இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் யஸீத் போன்ற மோசடிக்காரனுக்கு பைஆ கொடுப்பது என்பது இஸ்லாத்தை மிகப்பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளக்கூடும் என்பதை அறிந்திருந்தார்கள்.ஆகவே மக்காவை விட்டு கூஃபா செல்ல முடிவெடுத்தார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களை கூஃபாவிற்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள்.ஆனால் இமாம் அவர்கள் அங்கு செல்வதில் உறுதியாக இருந்தார்கள்.இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சகாக்களுடன் ஒரு நெடிய பயணக்குழுவுடன் சுட்டெரிக்கும் கோடையில் 1100 மைல்களுக்கு அப்பால் உள்ள கூஃபா நகரை நோக்கி பயணத்தை துவங்கினார்கள்.

பயணத்தின் ஆரம்பத்தில் பயணக்குழு பிரசித்தி பெற்ற கவிஞரான அல்-ஃபரஸ்தக் என்பவரை அல்-சிஃபா எனுமிடத்தில் சந்தித்தது.கூஃபா மக்களின் இருதயம் இவர்களின் பக்கம் இருந்தாலும் அவர்களுடைய வாட்கள் இவருக்கு எதிராக இருக்கும் என்ற காரணத்தால் அல்-ஃபரஸ்தக் இமாம் அவர்களை கூஃபாவிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.ஆனாலும் இமாம் அவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தார்கள்.மேலும் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரான முஸ்லிம் பின் அகீலிடமிருந்து அவருக்கு நற்செய்தி அடங்கிய முதல் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் கூஃபா மக்கள் இமாம் அவர்களை வரவேற்க மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகவும் அவருடைய தலைமையை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே ஹுஸைன்(ரலி) அவர்கள் ஒரு செய்தியுடன் மேலுமொரு  தூதுவரை அனுப்ப முடிவெடுத்தார்கள். பயணக்குழு கூஃபாவை நோக்கி சென்ற வண்ணமாக இருந்தது. பல நாட்கள் ஆகியும் முஸ்லிம் பின் அகீல் அவர்களிடமிருந்து எந்த ஒரு பதில் தகவலும் இமாம் அவர்களுக்கு வரவில்லை.

கூஃபாவில் முஸ்லிம் பின் அகீல் அவர்கள், முக்தார் அஸ்-ஸகஃபி மற்றும் ஹானி இப்னு உர்வா ஆகியோரின் உதவியுடன் இமாம் அவர்களின் ஆதரவாளர்களுடன் சந்திப்பை தொடர்ந்து வந்தார்கள்.குறுகிய காலத்தில் இச்சந்திப்புகளுக்கு ஆதரவு அதிகமாக கிடைத்தது.முஸ்லிம் பின் அகீல் அவர்களுக்கு ஆதரவு அதிகமாவதை அறிந்ததும் யஸீத், கூஃபாவின் ஆளுநரான நுஃமான் இப்னு பஷீருக்கு பதிலாக உபைய்துல்லாஹ் இப்னு ஸியாதை கூஃபாவின் ஆளுநராக நியமித்தார்.
அதேசமயம், ஹுஸைன்(ரலி) அவர்களது பயணக்குழு அதன் இலக்கான கூஃபாவிற்கு அருகில் இருக்கும் ஜுபாலா என்ற இடத்தை அடைந்தது.எதிர்பாராவிதமாக ஹுஸைன்(ரலி) அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று கிட்டியது. அந்த அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் முஸ்லிம் இப்னு அகீல் மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்த நபரான ஹானி இப்னு உர்வா ஆகிய இருவரும் உபைய்துல்லாஹ் இப்னு ஸியாதினால் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டனர் என்பதாகும். மேலும்  முக்தார் அஸ்-ஸகஃபி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு உபைய்துல்லாஹ் இப்னு ஸியாதினால் வேதனை செய்யப்படுவதாகவும் செய்தி கிடைத்தது.ஹுஸைன்(ரலி) அவர்கள் தங்களது தோழர்களை அழைத்து இந்த சோகமான செய்தியை அறிவித்தார்.இதனால் பயமுற்று சில தோழர்கள் பயணக்குழுவிலிருந்து விலகி சென்றனர்.

இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் தங்களது நெருங்கிய தோழர்கள் மற்றும் குடும்பத்தினருடன் யஸீத் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹூர் அல்-ரியாஹியின் தலைமையில் 1000 குதிரை வீரர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும்வரை தொடர்ந்தார்கள்.எதிரிப்படையினர் இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களின் குழுவை முன்னேறுவதிலிருந்து தடுத்தனர்.இதனால் இரு பிரிவினருக்குமிடையே சினம் ஏற்பட்டது. ஹுஸைன்(ரலி) அவர்கள் மக்களின் அழைப்பின் பேரில் தான் தன்னுடைய இந்த கூஃபாவை நோக்கிய பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறினார்கள். மேலும் கூஃபாவிலிருந்து தனக்கு வந்திருந்த ஒரு பை நிறைய கடிதங்களையும் காண்பித்தார்கள். நாங்கள் இந்த கடிதங்களை எழுதியவர்கள் அல்லர் என ஹூர் கூறினார். இமாம் அவர்கள், அவர்களிடம் ஒருவேளை நாங்கள் இப்பயணத்தை தொடர உங்களுக்கு விருப்பமில்லை எனில் ஹிஜாஸிற்கு திரும்ப செல்லத் தயாராக இருப்பதாக கூறினார்கள். “தங்களை ஆளுநர் இப்னு ஸியாதிடம் கொண்டு செல்லும்வரை உங்களை பின் தொடர தனக்கு கட்டளையிடப்பட்டிருப்பதாக ஹூர் பதிலளித்து, இமாம் அவர்களை கஃபா அல்லது மதீனா அல்லாத ஒர் இடத்திற்கு செல்ல பரிந்துரைத்தார்.
ஹுஸைன்(ரலி) அவர்களுக்கு இந்த காரியம் நியாயமாகப் படவே தங்களது பயணக்குழுவை கூஃபாவிலிருந்து விலக செய்தார்கள். ஹூரும் அவருடைய இராணுவமும் இமாம் அவர்களுக்கு பக்கவாட்டில் வந்த வண்ணம் இருந்தனர். இரு குழுவும் நைனவா என்னும் கிராமத்தை வந்தடைந்தனர். அங்கு இப்னு ஸியாதின் தூதுவர் ஹூரிடம் ஒரு செய்தியை கொடுத்தார். அச்செய்தியில் இவ்வாறு  குறப்பிடப்பட்டிருந்தது:-

“ஹுஸைன்(ரலி) அவர்களை நிறுத்தி வையுங்கள்! அதே போன்று அவரை உணவு மற்றும் தண்ணீர் இல்லாத ஒரு திறந்தவெளியில் நிறுத்துங்கள்!”

 இச்செய்தியில் உள்ள விஷயத்தை இமாம் அவர்களுக்கு ஹூர் அறிவித்தார். இதை பொருட்படுத்தாமல் இமாம் அவர்கள் தனது பயணத்தை தொடர்ந்து வேறொரு எதிரிப் படை அவர்களுடைய பயணத்தை  தடுத்து நிறுத்திய இடம்வரை தொடர்ந்தார்கள். இவ்விடம் கர்பலா என்பதை அறிந்து கொண்ட இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் இங்கு கூடாரம் அமைக்குமாறு கட்டளையிட்டார்கள். அன்று ஹிஜ்ரி 61 முஹர்ரம் 2 ஆம் நாளாகும்.

கர்பலா

இமாம் அவர்களின் முகாமை இராணுவம் முற்றுகையிட்டதை அறிந்ததும் யஸீதின் ஆளுநர் உபைய்துல்லாஹ் இப்னு ஸியாத் கர்பலாவிற்கு கூடுதல் படையை அனுப்பி வைத்தார்.அதற்கு உமர் இப்னு ஸஅத் இப்னு அபீ வக்காஸ் என்பவரை பொறுப்பாளராக நியமித்தார்.இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் உமர் இப்னு ஸஅதிடம் முற்றுகையை அகற்றி தன்னையும் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஈராக்கை விட்டு வெளியேற சம்மதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.உமர் இப்னு ஸஅதிற்கு இந்த கோரிக்கை பிடித்திருந்தது.யஸீதின் ஆளுநர் உபைய்துல்லாஹ் இப்னு ஸியாதிற்கு இந்த பேச்சுவார்த்தையின் முடிவுபற்றி செய்தி அனுப்பினார். இப்னு ஸியாதிற்கும் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக தோன்றியது. எனினும் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கும் முன் ஷிம்ர் பின் தில்-ஜவ்ஷின் அபிப்ராயத்தை பெற நாடினார். இந்த முடிவை ஷிம்ர் பின் தில்-ஜவ்ஷ் கடுமையாக ஆட்சேபித்தார். இதன் விளைவாக உமர் இப்னு ஸஅதிற்கு கட்டளை பிறப்பிக்கும் வண்ணமாக, ஒன்று இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களுடன் போர் புரிய வேண்டும்; அல்லது தான் வகித்து வரும் ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என யஸீதின் ஆளுநர் உபைய்துல்லாஹ் இப்னு ஸியாத் கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து ஷிம்ர் அவரை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் இப்னு ஸஅதின் தலையை துண்டித்து கூஃபாவிற்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

உமர் இப்னு ஸஅதிற்கு அந்த கடிதம் கிடைத்தது. அதில் உள்ள பின் விளைவுகளை உணர்ந்த அவர் இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களுடன் போர் புரிய முடிவு செய்தார். முஹர்ரம் 7ம் நாள் தனது படையை இமாம் அவர்களின் முகாமிற்கு நெருக்கமாக நகர்த்தி முகாமை சுற்றி வளைத்தார். உமர் இப்னு ஸஅத் முகாமிற்கு தடைகள் அமைத்து யூப்ரைடிஸ் நதியின் நீர் அவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்து அவர்கள் தன்னிடம் சரணடைவதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்.

இரண்டு நாட்கள் கழித்து (முஹர்ரம 9ம் நாள்) எதிரிப் படையினர் இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களின் முகாமை நெருங்கினா். ஹுஸைன்(ரலி்) அவர்களின் சகோதரர் அப்பாஸ் அவர்களிடம்  தாக்குதலை ஓர் இரவு தள்ளி போட இப்னு ஸஅதிடம் கோரும்படி கூறினார்கள். உமர் இப்னு ஸஅத் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு தனது படையினரிடம் அடுத்த நாள் காலைவரை தாக்குதலை தள்ளிப்போட உத்தரவிட்டார். இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களும் அவரின் தோழர்களும் இரவை தொழுகையில் கழித்தனர்.

ஆஷுராவின் விடியல்

இறுதியாக கர்பலாவின் மண்ணில் ஆஷுரா தினத்தன்று (முஹர்ரம் 10ம் நாள்) விடிந்தது. அந்நாளானது முஸ்லிம்களின் உதிரம் சிந்தும் நாளாகவும் 72 அப்பாவி உயிர்கள் ஷஹீத் ஆகப்போகும் நாளாகவும் அமையவிருந்தது.

காலையில் ஹுஸைன்(ரலி) அவர்கள் முகாமிற்கு வெளியே சென்று உமர் இப்னு ஸஅத் போருக்காக படைகளை ஒருங்கிணைப்பதை கண்டார்கள்.அது அவரை அச்சுறுத்தும் விதமாக இருந்தது;இருப்பினும் ஹுஸைன்(ரலி) அவர்கள் பணிவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.ஹுஸைன்(ரலி) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி தன் கரங்களை உயர்த்தினார்கள்.

“யா அல்லாஹ் எனக்கு நிகழும் அனைத்து துன்பங்களிலும் நான் உன்னிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன். அனைத்துவிதமான வன்முறையின் இடையே நீயே எனது நம்பிக்கையாக இருக்கின்றாய்! நீயே எனது அடைக்கலமாகவும் அனைத்தையும் வழங்குபவனாகவும்  இருக்கின்றாய்! எத்துனை துயரங்கள் எனது இதயத்தை பலஹீனப்படுத்தியது; அதை எதிர்கொள்ள எந்தவொரு வழிவகையும் இன்றி என்னை நிராயுதபாணியாக்கியது; அச்சமயம் என் தோழர்கள் என்னை கைவிட்டனர்; எதிரிகள் எள்ளி நகையாடினர்; நான் என்னுடைய விவகாரங்களை உன்னிடமே சமர்ப்பிக்கின்றேன்! மேலும் உன்னிடமே புகார் செய்கின்றேன்! ஏனென்றால் என்னுடைய விருப்பமாக நீயே இருக்கின்றாய்! நீ  என்னை இந்த சூழலில் இருந்து விடுவிப்பாயாக! மேலும் அதை என்னிடமிருந்து அகற்றி விடுவாயாக! நீயே கருணையாளர்களின் எஜமானன்! நன்மையின் சாராம்சமாகவும் அனைத்து விருப்பத்திற்குமான இறுதி இடமாக நீ இருக்கின்றாய்! “

கர்பலாவின் துயர சம்பவம்

போர் துவங்குவதை குறிப்பிட உமர் இப்னு ஸஅத் வானத்தை நோக்கி அம்பு ஒன்றை எய்தார்.இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் முதலில் தாக்குதலை எதிர்கொள்ள அனுமதிக்க வலியுறுத்தினர்.ஆகவே, எதிரிகளின் தாக்குதலுக்கு அவர்களே முதலில் ஆளானார்கள். போர் தீவிரமாக நடைபெற்றது.சிறிது நேரத்திலேயே பல எதிரிப் படையினரை இமாம் அவர்களின் ஆதரவாளர்கள் வெட்டி வீழ்த்தினர். அவர்களும் தாக்குதலிலும் எதிரிப் படைகள் தற்காப்பிலும் ஈடுபட்டனர். இது எதிரிகளிடம் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஹுஸைன்(ரலி) அவர்களை சார்ந்த 72 நபர்களுக்கு எதிராக, எதிரிப் படையினரின் 5000 நபர்கள் இருந்தனர். எனவே எதிரிகள் மிகவும் கவலையுற்றனர். அவர்களுடைய நரம்புகள் படபடத்தது! இதனால் அவர்களது படைத்தளபதி இமாம் அவர்களின் கூடாரங்களுக்கு தீ மூட்ட உத்தரவிட்டான். அதில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இதனால் அச்சத்திற்குள்ளானார்கள். மேலும் அதிகமான வீரர்களை கொண்டு படையை பலப்படுத்தினான்.

மதிய வேளையில் தொழுவதற்காக இமாம் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள். இச்சமயம் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய சில ஆதரவாளர்கள் மட்டுமே மீதமிருந்தனர். அவர்கள் அனைவரும் கூட்டாக தொழுகையை நிறைவேற்றினார்கள்.இரண்டு ஆதரவாளர்கள் மட்டும் தொழுதவர்களை பாதுகாத்தனர். தொழுகை  முடிந்தவுடன் ஒரு பாதுகாவலர் இறந்து கீழே விழுந்தார். அவருடைய முதுகில் 17 அம்புகள் பாய்ந்திருந்தன.

ஹுஸைன்(ரலி) அவர்களின் மகன் அலிய்யுல் அக்பர்  சண்டையிட அனுமதி பெற்று எதிரிகளை நோக்கி பாய்ந்து சென்றார். அவர் எதிரிகளுடன் தீவிரமாக சண்டையிட்டு தொடர்ந்து முன்னேறி எதிரிப்படையினரின் நடுப்பகுதி வரை ஊடுருவி சென்றார். எதிரிகள் அதிக அளவில் இருந்த காரணத்தால் அவர்கள் பொங்கி எழுந்து வாட்களாலும் ஈட்டிகளாலும் அவரை கடுமையாக தாக்கினர். இதனால் அவருடைய உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் மரணிக்கும் வரை அக்காயங்களிலிருந்து உதிரம் வடிந்த வண்ணமாக இருந்தது. இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த உடலை கூடாரத்திற்கு எடுத்து வந்தார்கள். இதை கண்ட அவருடைய சகோதரியும், குழுவில் உள்ள மற்றவர்களும் அச்சமுற்று அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

அப்பாஸ் அவர்களும் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் மற்ற ஐந்து சகோதரர்களும் அடுத்து சண்டையிட சென்றார்கள்.இவர்களும் தீவிரமாக எதிரிகளுடன் சண்டையிட்டார்கள்.  அப்பாஸ் அவர்கள் தாகமடைந்த குழந்தைகளுக்காக தண்ணீர் கொண்டுவர நதியை நோக்கி சென்றார். அவர் தண்ணீர் எடுத்து கொண்டு குதிரையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிரிகளின் பெரும்படை ஒன்றால் பெருந்தாக்குதலுக்கு உள்ளாகி மிகுந்த காயமடைந்தார். பெருமுயற்சி மேற்கொண்டும் அப்பாஸ் அவர்களால் தண்ணீரை காப்பாற்றிட முடியவில்லை. அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து தன் இறுதி மூச்சை விட்டார்.

அடுத்து போரக்களத்திற்கு ஹஸன்(ரலி) அவர்களின் மகன்களும் ஜைனப்(ரலி) அவர்களும் மற்றும் அவருடைய உறவினர்கள் என மொத்தம் 17 பேர் சென்றார்கள். அனைவரும் தங்களுடைய வாலிபப்பருவத்தில் இருந்தனர் இவர்கள் அனைவரும் எதிரிகளிடம் தைரியமாக எதிர்த்து நின்றனர்.

மதியம்வரை 70 பேர் தங்களது இன்னுயிரை கர்பலாவில் தியாகம் செய்திருந்தனர்.அனைவரும் மிகவும் மோசமான சூழ்நிலையில் கடுமையாக போரிட்டனர். கடுமையான தாக்குதலாலும், உடல் வறட்சி, சோர்வு மற்றும் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தாருக்கு இனி என்ன நேருமோ என்று சொல்லொண்ணா துயரம் கொள்ளலானார்கள்.ஹுஸைன்(ரலி) அவர்களின் அன்பிற்குரியவர்கள் மற்றும் குழந்தைகள் அநியாயமாக வெட்டப்படுவதை தன் கண்முன் நிகழ்வதை கண்டும் அதை சகித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எதிரிகளை எதிர்கொள்ள  ஹுஸைன்(ரலி) அவர்கள் மட்டுமே இறுதியாக இருந்தார்கள். சரியாக அந்நேரத்தில் ஹுஸைன்(ரலி) அவர்களுடைய குழந்தை விடாமல் அழும் சத்தத்தை கேட்டார்கள். ஹுஸைன் (ரலி) தன்னுடைய குடும்பத்தாரிடம் கொண்ட அன்பு அலாதியானது; அதிலும் குறிப்பாக அவதியுறும் இக்குழந்தையின்பால் கொண்ட அவரின் அன்பை அளவிடமுடியாது. அவர் தன் 6 மாதமே ஆன குழந்தையை தன் கையில் சுமந்தவாறு குழந்தைக்கு தண்ணீர் தருமாறு எதிரிப்படையின் வீரர்களிடம் முறையிட்டார். இமாம் அவர்கள் எதிரிகளிடம் இஸ்லாமிய உணர்ச்சியை எழுப்ப முயன்றார்கள்.கல் நெஞ்சம் கொண்ட எதிரிகள் தண்ணீர் தருவதற்கு பதில் அப்பிஞ்சுக்குழந்தையை நோக்கி அம்பெய்தி குழந்தையை கொலை செய்தனர். இதைக்கண்ட இமாம் அவர்கள் மிகுந்த அதிரச்சிக்குள்ளானார்கள். தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வேதனையை அனுபவித்தார்கள். தன் கரத்தில் பிணமாக தொங்கிய குழந்தையை கண்டு மிகுந்த வேதனைக்கு ஆளானார்கள். அவர் தனது உள்ளங்கையில் குழந்தையின் உதிரத்தை சேகரித்து வானத்தை நோக்கி வீசியவர்களாக அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.

“யா அல்லாஹ்! என்னுடைய இறைவனே, எனது ஆறுதல் என்னவெனில் நான் இங்கு எதிர்கொண்டிருப்பவைகளை நீ உன்னுடைய மகிமையை கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றாய் என்பதே”.

இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் தனி நபராக ஆயிரம் நபர்களை எதிர்கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் எதிரிகளிடம் வீரத்துடன் எதிர்கொண்டு போரிட்டு கொண்டிருந்தார்கள். இதன் விளைவாக பலத்த காயத்திற்கு ஆளானார்கள். ஆயிரம் எதிரிப்படையினர் அவரை சூழ்ந்திருந்த போதிலும் எவரும் இமாமை நோக்கி வர தைரியம் கொண்டிருக்கவில்லை.இந்த அமைதியானது ஷிம்ர் தாக்குதலை நடத்துமாறு உரக்க கத்தியபோது கலைந்தது. மறுமுறை பயமுறுத்தும் விதமாக ஷிம்ர் கூச்சலிட்டதின் விளைவாக அனைவரும் கூட்டாக சேர்ந்து தாக்கினார்கள்.அச்சமயம் ஒரு வாளானது ஹுஸைன்(ரலி) அவர்களின் இடது மணிக்கட்டில் பாய்ந்து ஆழமாக இடது கரத்தை வெட்டியது; அதிலிருந்து உதிரம் நீரூற்று போல் பாய்ந்து வந்தது. அடுத்து இன்னொரு வாள் அவரின் பின் முதுகின் மேற்புறத்தில் பாய்ந்து தாக்கியது. இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் உடலிலிருந்து அளவின்றி உதிரம் வெளியேறி உணர்வற்றவர்களாக தரையில் விழுந்தார்கள். அத்தருணம் இமாம் அவர்கள் அதிர்ச்சியுற்றவர்களாக இருந்தாரகள்; அவர்கள் தடுமாறிய போதும் வாளை ஊன்றியவர்களாக எழுந்து நிற்க முயற்சி செய்தார்கள். பின்னர் அவர்களுடைய உயிர் போகும் அளவிலான ஒரு அடி விழுந்தது.

இத்தருணத்தில் ஷிம்ர் முன் வந்து இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களின் புனித தலையை அவர்களது உடலிலிருந்து துண்டித்தான்; இது நபி(ஸல்) அவர்களால் அடிக்கடி முத்தமிடப்பட்ட அப்புனித தலையாகும்! ஷிம்ரும் அவனை சார்ந்தவர்களும் இமாம் அவர்களின் தலையை கர்வத்துடன் ஈட்டி முனையில் ஏந்தியபடி 600 மைல்கள் தொலைவில் உள்ள யஸீதிடம் கொண்டு சென்றார்கள்! இதனைக் கண்ட யஸீதின் அரசவையிருந்த ஒரு முதியவர் இவ்வாறு கூச்சலிட்டார்:-

“அந்தோ! இவர் நபி(ஸல்) அவர்களின் பேரனாவார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதோ இந்த உதடுகளை அருள் பொருந்திய ரசூல்(ஸல்) அவர்களால் முத்தமிடப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.”

யஸீத் ஒரு ஏமாற்றுக்காரர்

இவ்வனைத்து நிகழ்வுகளும் யஸீதினால் ஒருங்கிணைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதை தெளிவாக காட்டுகிறது.யஸீத் ஒருபோதும் ஒருமித்த பைஆவை பெற்று தேர்ந்தெடுக்கப்படவில்லை  எனவே அவர் ஒருபோதும் கலீஃபா பொறுப்பிற்குரியர் இல்லை! அவர் ஒரு ஏமாற்றுக்காரர்!

யஸீத் இப்னு முஆவியா இப்னு அபூ சுஃப்யான் தன்னை முஸ்லிம்களுக்கான கலீஃபாவாக அறிவித்தாலும், ஓர் அநியாயக்காரன் அதிகார பிரயோகம் மூலம் பதவியை பெற்றாரேயானால் அவர் கலீஃபாவாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார். ஏனெனில் இங்கு கிலாஃபத்தானது முஸ்லிம்களால் அமைக்கப்படாததே காரணமாகும். அவர் ஒருவேளை மக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி அவர்களின் விருப்பமின்றி பைஆவை பெற்றிருந்தால், அவர் பைஆவை பெற்றிருந்தாலும் (கட்டாயப்படுத்தி எடுத்திருந்தால்) அவர் கலீஃபாவாக ஆகமுடியாது.ஏனென்றால் கட்டாயப்படுத்தி விருப்பமின்றி பெறப்பட்ட பைஆவானது தகுதியானதாக கருதப்படமாட்டாது. எனவே அதன் மூலம் கிலாஃபா நிறைவு பெறாது. ஏனெனில் அது பரஸ்பர சம்மதத்துடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது;கட்டாயப்படுத்தி தன்னிச்சையாக முடிவு செய்யப்படுவது அல்ல.எனவே கிலாஃபத்தானது ஒருமித்த சம்மதத்துடன் தேர்ந்தெடுப்பதன் மூலம் அல்லாமல் நிறைவுபெறாது.எனினும், ஒருவேளை அந்த அநியாயக்காரன் மக்களை சம்மதிக்க வைக்க முடிந்தால் அதாவது பைஆ கொடுப்பதால் முஸ்லிம்களுக்கு நன்மை ஏற்படும் என்ற காரணத்தாலும் ஷரீஆ சட்டங்களை நிலைநாட்டிட அவருக்கு பைஆ கொடுப்பது கட்டாயமாகிறது; மேலும் மக்கள் இந்த விஷயத்தில் திருப்தியடைந்து அதை ஏற்றுக்கொண்டு பின்னர் ஒருமனதாக அவர்களுடைய சுயவிருப்பப்படி பைஆ கொடுப்பார்களேயானால் அத்தருணத்திலிருந்து அவர் கலீஃபாவாக கருதப்படுவார்; ஏனென்றால் இப்போது பைஆவானது ஒருமனதாக தங்கள் விருப்பப்படி வழங்கப்பட்டாலும், யஸீதின் விஷயத்தில் இது ஒருபோதும் நடக்கவில்லை. மேலும் முஸ்லிம்கள் தாங்கள் யாருக்கு பைஆ கொடுக்க வேண்டும் என விரும்பினார்களோ, அவருக்காக பைஆவை பெற முயன்றது சரியான ஒன்றாகும்.

கர்பலா துயர நிகழ்வு தரும் படிப்பினை

மனிதகுலம் இதுவரை  சந்தித்த மிக மோசமான துயர நிகழ்வுகளில் கர்பலா துயர நிகழ்வு ஒன்றாகும். எனவே இந்த துயர சம்பவத்தின் மூலம்  முக்கியமான படிப்பினைகளை கற்றுக்கொள்ளவது நமக்கு கட்டாய கடமையாகிறது. கர்பலாவில் நடந்த முழு சம்பவத்தின் மூலம் கீழ்வரும் படிப்பினைகள் நமக்கு காணக் கிடைக்கிறது.

 

கிலாஃபா ஒரு ஜீவாதாரப் பிரச்சனை

கிலாஃபா என்னும் அமைப்பானது வாழ்வா சாவா போன்ற விஷயமாகும். இவ்விஷயத்திற்காகத் தான் இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் தங்களது இன்னுயிரையும், அவர்களது குடும்பத்தாருடைய உயிர்களையும்,அவருடைய மகனின் உயிரையும் தியாகம் செய்தார்கள். கிலாஃபத்தின் நாற்காலியை தவறாகவோ அல்லது அநியாயமான முறையிலோ பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கவே இது செய்யப்பட்டது.

1.பைஆ கொடுத்து கலீஃபாவை நியமிப்பதே சரியான வழிமுறையாகும்; அது ஒருமித்த சம்மதத்துடனும் தேர்வு முறையுடனும் இருக்கவேண்டும்.

பைஆ பெறுவது மட்டுமே கலீஃபாவை நியமிக்கும் இஸ்லாமிய வழிமுறையாகும். யஸீத் ஒருபோதும் முஸ்லிம்களின் சம்மதத்தையும் அவர்களின் விருப்பத்தையும் கொண்டு தேர்வு செய்யப்படாததை நாம் தெளிவாக காணலாம். உண்மையில் அவருடைய தந்தை முஆவியா இப்னு அபூசுஃப்யான்(ரலி) அவருக்காக முஸ்லிம்களிடம்  கட்டாயப்படுத்தி பைஆவை பெற்றார். மேலும் அவருடைய இந்த  அதிகாரத்தை யாராவது எதிர்த்தால் அவர்களை ஒடுக்கி வந்தார். இதன் மூலம் நாம் பெறும் மிகமுக்கிய படிப்பினை என்னவெனில், பைஆ ஒப்பந்தம் என்பது கட்டாயப்படுத்தி பெறப்படுவது அல்ல; மாறாக அது முழு சம்மதத்துடன் தேர்வு முறையுடன் இருக்கவேண்டியதாகும்.

2. பைஆவை பெறும் நடைமுறை கட்டாயமாக  இஸ்லாமிய கிலாஃபத்தின் அரசியலமைப்பை சார்ந்து இருக்குமாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

முஆவியா(ரலி) அவர்கள் எவ்வாறு தனது மகனுக்காக பைஆவை பெற சூழ்ச்சி மேற்கொண்டார் என்பதை நாம் கண்டோம். இஸ்லாமிய கிலாஃபா அரசியலமைப்பில் உள்ளடக்கிய பைஆவை பெற ஒழுங்குபடுத்தியிருந்தால் இதை செய்ய அவருக்கு கடினமாக இருந்திருக்கும்;உம்மத் ஒத்துக்கொண்டது போன்ற நடைமுறையை செயல்படுத்த வழிவகுத்திருக்கும்.

3.மாகான ஆளுநர்களை விரைவாக மாற்றுதல்

முஆவியா(ரலி) அவர்களை 20 ஆண்டு காலம் (கலீஃபா பொறுப்பை ஏற்கும் முன்பு) ஷாமில் ஆளுநர் பொறுப்பில் நீடிக்க வைத்ததன் காரணத்தால் அவரால் மக்களின் செல்வாக்கை பெறமுடிந்தது. இதனால் அவர் ஷாம் பகுதி மக்களால் கவரப்பட்டதோடு, அவருக்கென்று ஒரு  வலுவான ஆதரவை திரட்டக்கூடிய ஒரு அடித்தளத்தையும் பெற்றார். எனவே கிலாஃபா பொறுப்பை நிறைவேற்றும் ஒரு கலீஃபா அரசியலில்  திறம்பட செயலாற்றவேண்டுமெனில், மாகண ஆளுநர்களை தொடர்ச்சியாக மாற்றுவது விவேகமான செயலாக கருதப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் மாகண ஆளுநர்களை குறிப்பிட்ட காலத்திற்கு நியமித்து பின்பு அவர்களை விடுவித்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். எந்தவொரு ஆளுநரும் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முழுமையாக நீடித்தது கிடையாது. இது மாகண ஆளுநர்களை நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்பதனை சுட்டிக்காட்டுகிறது. மாறாக ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டும் நியமித்து பின்பு அவர்களை விடுவித்துவிட வேண்டும்.எனினும் ஆளுநரின் பதவிக்காலத்தின் அளவைப் பொறுத்தவரை (குறுகிய அல்லது நீண்ட) , இத்தனை ஆண்டுகள்தான் என்பதை நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்து தீர்மானிக்க எந்த ஆதாரமுமில்லை. இச்செயலைப் பொறுத்தவரை நபி(ஸல்) அவர்கள் மாகண ஆளுநர்களின் பதவியை அவர்களின் வாழ்நாள் முழுவதற்கும் நீட்டித்ததில்லை.இதன்மூலம் நிலைநாட்டப்படும் உண்மை என்னவெனில், நபி(ஸல்) அவர்கள் ஆளுநர்களை நியமித்து – விடுவிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்களாக இருந்தார்கள். எனினும் ஷாமில் முஆவியா(ரலி) அவர்கள் நெடுங்காலத்திற்கு உமர்(ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களின் காலங்களில் தொடந்து வாலியாக(ஆளுநராக) இருந்ததே உம்மத்தை இதுபோன்ற இந்த வழிகேடான(ஃபித்னா), அதிர்ச்சியளிக்கக்கூடிய செயல் நடைபெறும் அளவிற்கு தள்ளியது.இதன்மூலம் நெடுங்காலத்திற்கு ஒரு ஆளுநரை நியமிப்பது முஸ்லிம்களுக்கும் கிலாஃபத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்ற முடிவை நமக்கு காட்டுகிறது.இந்த காரணத்தால் ஒருவர் ஆளுநர் பொறுப்பேற்றிருக்கும் காலம் நீண்டிருக்கக்கூடாது.

உமர்(ரலி) அவர்கள் வாலிகள்(ஆளுநர்கள்) மற்றும் ஆமில்களின் தவற்றை சுட்டிக்காட்டும்போது கடுமையாக நடந்து கொள்வார்கள்.அவர்களின் தவறிற்கு  உறுதியான சான்று இல்லாதபோதும் ஐயப்பாட்டின் அடிப்படையில் அவர்களை  பொறுப்பிலிருந்து விலக்கி இருக்கிறார்கள். உமர்(ரலி)  அவர்கள் சிறு சந்தேகத்தின் அடிப்படையிலும் ஆளுநர்களை, அவர்கள் மீதான ஐயப்பாட்டின் நிலையை அடையாமலிருந்தும் நீக்கியுள்ளார்கள்.இதுபற்றி உமர்(ரலி) அவர்களிடம் வினவியபோது – “மக்களின் விவகாரங்களை சீர்திருத்த ஓர் அமீரின் பதவியை நீக்கி வேறொருவரை நியமிப்பது எளிதான காரியமாகும் என கூறினார்கள்.

4. மாகாண ஆளுநர்களை தொடர்ந்து கண்காணித்தல்

மற்றொரு படிப்பினையாக நாம் பெற்றுக் கொள்வது என்னவெனில், ஆளுநர்களின் பணிகளை கலீஃபா தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.ஆளுநர்களின் காரியங்களை சோதிக்கவும் பரிசோதனை செய்யவும் கலீஃபா தகுதியான ஒருவரை நியமிக்க வேண்டும். கலீஃபா குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர்கள் அனைவரையுமோ அல்லது சிலரையோ சந்தித்து அவர்களின் பொறுப்பிலுள்ளவர்களின் ஆளுநர்கள் பற்றிய புகார்களை கேட்டறிய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) மற்றும் அபு மூஸா(ரலி) ஆகியோர்களை ஆளுநர்களாக நியமிக்கும் முன் சோதித்ததை போன்று ஆளுநர்களை நியமிக்கும் முன் அவர்களை சோதிக்கும் வழக்கம் கொண்டிருந்தது ஊர்ஜிதமாகிறது. அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு தங்களது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என அறிவுறுத்தியது போன்று அனைவருக்கும் அறிவுறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அபன் பின் சயீத் (ரலி) அவர்களை பஹ்ரைனிற்கு ஆளுநராக நியமித்தபோது அவரிடம் “அப்து கைஸை நல்லமுறையில் பார்த்துக்கொள்ளுமாறும் அவர்களின் தலைவர்களை கண்ணியப்படுத்துமாறும் கூறியதை போன்று சில குறிப்பிட்ட விஷயங்களில் அவர்களை கவனம் கொள்ள செய்தார்கள்.அதேபோன்று நபி(ஸல்) அவர்கள் ஆளுநர்களைப் பற்றி வரும் செய்திகளை, அவர்களை அழைத்து சுட்டிக்காட்டியதோடு அவர்களுடைய சூழ்நிலைகள் பற்றி விசாரித்து அதுபற்றி அவர்களின் கருத்துக்களை கேட்கும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. மேலும் நபி(ஸல்) அவர்கள் ஆளுநர்களிடம் வருவாய் மற்றும் செலவீனங்கள் பற்றி விசாரிக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

உமர்(ரலி) அவர்கள் மாகாண ஆளுநர்களை உற்றுநோக்கி வந்தார்கள்; மேலும் முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) அவர்களை ஆளுநர்களின் விவகாரங்களை ஆய்வு செய்வதற்காகவும் அவர்களை பார்வையிடுவதற்காகவும் நியமித்தார்கள். உமர்(ரலி) அவர்கள் ஆளுநர்களை ஹஜ் காலத்தில் குழும செய்து அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வார்கள்;அவர்களின் மீதான மக்களின் புகார்கள் பற்றியும் கேட்டறிவார்கள். உமர்(ரலி) அவர்கள் ஒருமுறை தன்னை சுற்றியிருந்த மக்களிடம் இவ்வாறு கூறினார்கள்:-

 ”நான் உங்களில் சிறந்த ஒருவரை நியமித்து நியாயமாக நடந்துகொள்ள சொல்லி கட்டளையிட்டால் என்னுடைய கடமை நிறைவேறிவிட்டது என நீங்கள் கூறுகிறீர்களா? அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். உமர்(ரலி) அவர்கள் “இல்லை! நான் அவர்களின் செயல்பாடுகளை சோதித்து, அவர்கள் நான் கட்டளையிட்டதை நிறைவேற்றினார்களா இல்லையா என்று பார்க்காதவரை எனது கடமை நிறைவேறாது” என்று கூறினார்கள்.

5. ஆளுநர்கள் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.

முஆவியா(ரலி) அவர்கள் மாகான ஆளுநராக இருந்த சமயத்தில் சிரியா மற்றும் ஈராக்கிற்கு பொதுப்படையான அதிகாரத்துடன் உடைய(wilayatul ammah)   ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அதாவது பொதுப்படையான வாலியாக, அவர் இராணுவம், நிதித்துறை, நீதித்துறை, காவல்துறை, பொருளாதாரத்துறை, நிர்வாகத்துறை மற்றும் ஆட்சித்துறை என அனைத்திலும் முழு கட்டுப்பாடு உடையவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

முஆவியா (ரலி) அவர்கள் சில கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமுள்ளவராக இருந்திருந்தால் அவரால் அலி(ரலி) அவர்களுக்கு எதிராக சண்டையிட தேவையான ஆதரவை திரட்டியிருக்க முடியாது; அல்லது அவரது மகனிற்கு தலைமை பதவியை வழங்கியிருக்க முடியாது. உஸ்மான்(ரலி) அவர்களின் மரணத்திற்கு பிறகு முஆவியா (ரலி) அவர்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர  அலீ(ரலி) அவர்களுக்கு பிரச்சினை இருந்தது. ஏனெனில் ஷாமில் முஆவியா (ரலி) அவர்கள் தனக்கென உறுதியான அதிகார அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்கு காரணம் ஆகும். ஆகவே ஆளுநருக்கு பொதுப்படையான அதிகாரத்தை வழங்குவது இஸ்லாமிய கிலாஃபத்திற்கு தீங்கை ஏற்படுத்தும். ஆகையால் மாகாண ஆளுநருக்கு சில குறிப்பிட்ட அதிகாரத்தை மட்டுமே தரவேண்டும். இதனால் அவர் கிலாஃபத்தில் தன்னாட்சி உரிமை பெறுவதிலிருந்து தடுக்கப்படுவதோடு கலீஃபாவின் நிலையை வலுவூட்ட உறுதியான நிலை ஏற்படும்.

அப்பாஸிய கிலாஃபத்தின் பிந்தைய பகுதியில் மாகாணங்கள்(விலாயா) கிலாஃபத்திலிருந்து தன்னாட்சி உரிமை பெற்றதாக மாறியதன் காரணத்தால், கிலாஃபா மேலும் நலிவடைந்ததை நாம் காணலாம்.ராணுவம், நீதித்துறை, நிதித்துறை ஆகியவை இந்த பிளவுகளுக்கு முக்கிய காரணிகளாக பங்களித்தது. ஏனென்றால் ராணுவம் என்பது அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நீதித்துறை உரிமைகளை பாதுகாக்கவும்  தண்டனைகளை நிறைவேற்றுவதையும் பறைசாற்றுகிறது. ஆகவே வாலிகளுக்கு(ஆளுநர்கள்) சில குறிப்பிட்ட விலாயாவை(wilayatul khassah)   நீதித்துறை, ராணுவம், நிதித்துறையை தவிர்த்து வழங்கவேண்டும், இம்மூன்றையும் ஒரு வாலிக்கு ஒதுக்குவது கிலாஃபத்திலிருந்து பிளவுறும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமாக கிலாஃபத்தின் ஆளுமையை குறைப்பதற்கு வழிவகுக்கும்.

6. வாலிகளுக்கான நிபந்தனைகள்.

நபி(ஸல்) அவர்கள் மக்களில் நல்லவர்களையே ஆளுநர்களாக நியமிப்பார்கள்.  அல்லாஹ்வின் மீது நேசமுடையவர்களாகவும் ஞானமுடையவர்களாகவும்  திகழ்ந்த சான்றோர்களையே நியமிப்பார்கள். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களையும் மக்களின் நெஞ்சில் ஈமானை அதிகப்படுத்துபவராகவும் இஸ்லாமிய அரசை மதிப்பவர்களாகவும் இருப்பவர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.

சுலைமான் இப்னு பரிதா அவர்கள் தன் தந்தை அறிவித்ததாக கூறுகிறார்கள்:-

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمَّرَ أَمِيرًا عَلَى جَيْشٍ، أَوْ سَرِيَّةٍ، أَوْصَاهُ فِي خَاصَّتِهِ بِتَقْوَى اللهِ، وَمَنْ مَعَهُ مِنَ الْمُسْلِمِينَ خَيْرًا

 ”நபி(ஸல்) அவர்கள் ஒரு படைக்கு அல்லது குழுவிற்கு தலைவரை நியமிப்பதற்குமுன், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வதற்கும் இன்னும் அவர்களுடன் வரும் முஸ்லிம்களிடையே நல்லமுறையில் நடப்பதற்கும் அறிவுறுத்துவார்கள்.” (முஸ்லிம்)

மாகாண ஆளுநர்கள் விலாயாவின்(மாகாணத்தின்) தலைவராக இருப்பதால் மேற்கூறிய ஹதீஸ் அவர்களுக்கு பொருத்தமாக அமைகிறது.எனவே தகுதியற்றவர்களை வாலிகளாக நியமிப்பதன் மூலம் முன்பு குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.


முடிவுரை

கர்பலாவின் படுகொலை முஸ்லிம்களுக்கு அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்க்கும் விஷயத்தில் உறுதியாக கடைபிடிக்கும் முக்கியத்துவத்தை அழுத்தமாக கூறுகிறது. இன்றைய முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் மனவிருப்பப்படி நியமிக்கப்பட்டவர்கள் அல்லர்; மாறாக மேற்கத்திய காலனித்துவ வாதிகளால் உம்மத்தின் மீது சுமத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அநியாயக்காரர்களாகவும் உம்மத்திடமிருந்து அதிகாரத்தை அபகரித்தவர்களாகவும் உள்ளனர். உம்மத்தின் முழு ஆற்றலை விளங்கிட செய்யவும்  இஸ்லாம் தந்திருக்கும் மதிப்பை மீட்டெடுக்கவும் இந்த போலி யஸீத்களை நீதமான கிலாஃபத்தை கொண்டு மாற்றியமைத்திட வேண்டும்.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

 உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.   (அந்நூர்:55)

இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டதை நிர்மாணித்தல்

அரபு எழுச்சியும்(Arab spring) அதனையடுத்து ஆட்சியை பிடித்த அமைப்புகள் கண்ட தோல்விகளும் பல அரசியல் குறைபாடுகள் உள்ளதை வெளிக்காட்டியது. இது கடந்த கால அரசியலை வரலாற்றின் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு புதிய அரசியல்  எழுவதற்கான நம்பிக்கை தோன்றியிருக்கிறது. எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய இஸ்லாமிய குழுக்கள் தற்போது நிலவிவரும் அரசியல் அமைப்பை தற்காத்து கொள்ள தங்களுடைய சக்திக்கு  உட்பட்டு இஸ்லாமிய அரசியல் எப்போதும் எழுந்துவிடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றனர்.

இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்றால் என்ன?

முஸ்லிம் உம்மா இன்றைய சூழலில் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.உலகின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வையில் இஸ்லாம் ஒரு சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கியிருப்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமிய அரசியலை தெளிவாக முழுமையான முறையில் எவர் தனதாக்கி கொள்ளவில்லையோ அவரை ஆதரப்பது கூடாது.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை
(அர்-ரஃது, 11)

அரசியல்வாதிகளை உருவாக்குதல்

ஒரு திறன்மிக்க அரசியல்வாதி அரசியலைப்பற்றிய சீரிய சிந்தனை கொண்டிருப்பது அவசியமாகும். அதாவது உலகின் நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை பற்றிய பார்வையில் அவருக்கு என ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அந்நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை பார்வையிட வேண்டும். அவ்வாறு அவரிடம் தனக்கென ஒரு கண்ணோட்டம்  இல்லாத பட்சத்தில் அடிக்கடி ஏற்படும் முரண்பாடான சூழ்நிலைகளில் பனிமூட்டத்தில் தெளிவில்லாத பார்வை உடையவரை போன்று அவர் குழம்பிப்போவார். அவருடைய குறிக்கோளை  அடையும் ஆற்றலை இழக்கும் நிலைக்கு ஆளாவார். மேலும் அவருடைய அரசியல் நிலை ஒழுங்கற்றதாகவும் மற்றும் முரண்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும்.

 நபி(ஸல்) கூறினார்கள்.

مَنْ وَلاَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَب دُونَ حَاجَتِهِمْ وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمُ احْتَجَبَ اللَّهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ وَفَقْرِهِ

“எவரொருவரை முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்து அதில் அவர் பொடுபோக்காக இருந்து அவர்களின் தேவைகள் மற்றும்  ஏழ்மையை போக்க அக்கறை கொள்ளவில்லையெனில் மறுமை நாளில் அல்லாஹ் இவருடைய விஷயத்தில் கவலையற்றவனாகவும் அவருடைய தேவை மற்றும் ஏழ்மையில் அக்கறை கொள்ளவும் மாட்டான்.”                    (அபூதாவூத் 2948)

மேற்குலகில் குஃப்ஃபாரிய அரசியல்வாதிகள் நிகழ்வுகள் மற்றும் உலக நடப்புகளை பார்வையிட தங்களுக்கென ஒரு பிரத்தியேக கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அவர்கள் முதலாளித்துவம் மற்றும் அதன் அடிப்படையை கொண்ட சிந்தனைகளான மதச்சார்பின்மை, ஜனநாயக கோட்பாடுகள், சுதந்திரம் மற்றும் ஒருவரின் நலனை அடைவதற்கான தேடல் ஆகியவைகளின் அடிப்படையில் அவர்களின் கண்ணோட்டம் அமைந்திருக்கும். அவர்கள் அரசியலில் ஈடுபடும்போது அவர்களின் வெளியுறவு கொள்கை அவர்களது தேச நலனை அடைவது மட்டுமே தங்களது அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதை புரிந்துள்ளனர்.அவர்கள் இதர தேசங்களை எவ்வாறு நோக்கவேண்டும் எனவும் அவர்களுடனான உறவில் எதை எதிர்பார்க்க வேண்டும் எனவும் நன்கு புரிந்துள்ளனர். உள்நாட்டில் மக்களின் விவகாரங்களை மேற்கொள்வதில் தங்களுடைய அரசின் பொறுப்புகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வை கொண்டுள்ளனர். தனிமனிதன் எவ்வாறு தன் வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்களின் உரிமைகள் என்ன என்ற சிந்தனையும் அவர்களிடத்தில் உள்ளது. அவர்களது சித்தாந்தம் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் உள்ளது அதை தழுவி உலகத்தை நோக்கிய பார்வையை அதனடிப்படையில் அமைத்து கொள்கின்றனர்.

அவர்கள் அரசியல் வாழ்வில் ஈடுபடும்போது அவர்களுடைய நாட்டில் உள்ள அரசியல் பாரம்பரியத்தின் மூலம் அனுபவம் பெற்று அரசியல் கொள்கைகளை உருவாக்கி கொள்கின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும், பலவிதமான சொல்வாக்கு கொண்டவர்களாகவும், சமயத்திற்கு ஏற்றார்போல மாறுபவர்களாகவும், தங்களை நியாயப்படுத்துவதற்கும் அவர்கள் ஊழல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் அதை மறைப்பதற்கு பொய் சொல்லவும் பழகிக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தில் தீர்ப்பளிக்கும் போது சரி – தவறு என்னும் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய நலனை எவ்வாறு அது தொடர்புபடுத்துகிறது என்பதை பொறுத்தே அவர்களது தீர்ப்பு அமையும்; நிகழ்வுகளையும் பிறருக்கு சாதகமற்ற நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும்  தன்மையை வளர்த்துக்கொள்வார்கள். அவர்கள் உண்மையில் என்ன உணர்கிறார்களோ அல்லது நினைக்கிறார்களோ அதனடிப்படையில் அல்லாமல் பொதுமக்களிடையே ஒரு குறிப்பிட்ட முகத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் அரசியலைப் பொறுத்தமட்டில் அது காட்டின் சட்டம் எனவும், இன்று நண்பராக இருக்கக்கூடியவர் வேறொரு நாள் எதிரியாக இருக்கக்கூடும் என்பதையும் அறிந்துள்ளனர். இதனடிப்படையில் மேற்கத்திய அரசியல்வாதி நிகழ்வுகள் மற்றும் உலக நடப்புகளை நோக்குவதற்கு தனக்கென ஒரு கோணத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். மேலும் தனக்கும் தன் நாட்டிற்கும் எவ்வகையான அரசியல் நடவடிக்கை மேற்கொள்வது முக்கியம் என்பதை தீர்மானிக்கிறான்.

இஸ்லாம் மேற்கத்திய அரசியல்வாதி கொண்டுள்ள பல தன்மைகளை கண்டிக்கின்றது. அதேபோல் அரசியலில் ஈடுபடுவதற்கு அவர்கள் அடிப்படையாக கொண்டுள்ள கண்ணோட்டத்தையும் கண்டிக்கின்றது.இஸ்லாம் ஒரு அரசியல்வாதியை அதனுடைய பிரத்தியேக அடிப்படை மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. தன்னலன் மட்டுமே அல்லாமல் இஸ்லாம் தன்சார்பற்ற நிலையை வளர்க்கின்றது, ஒரு குறிக்கோளை அடைய இழிவான யுக்திகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக உண்மை நிலையையும் வெளிப்படை நிலையையும் மேற்கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு எதை நாடுகிறானோ அதையே தன் சகோதரனுக்கு நாடச் சொல்லி இஸ்லாம் கற்றுத்தருகிறது- மேற்குலகமோ அதிகமாக மற்றவர்களின் நலனை விட தன்னலன் மட்டுமே முக்கியமென கற்றுத்தருகிறது.

முஸ்லிம்களை பொறுத்த வரை, உஸ்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது இஸ்லாமிய கண்ணோட்டத்தை கொண்ட அரசியல்வாதிகள் அநேகமாக காணாமல் போய்விட்டனர். காலனியாதிக்க இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்களுடைய அரசியல் சிந்தனையில் நஞ்சை விதைத்து அவர்களின் பிரத்யேக அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அவர்களை திசை திருப்புவதில் வெற்றி கண்டனர். அவர்கள் இஸ்லாத்திற்கு அந்நியமான அரசியல் சிந்தனைகளான தேசியவாதம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி அதை வேகமாக பரவச்செய்தனர் இதனால் அரேபிய பகுதியை சார்ந்த  முஸ்லிம்கள் இஸ்தான்புல்லை சார்ந்த முஸ்லிம்களை வேற்றுமையுடன் பார்க்க தொடங்கினார்கள். 1924-ல் இஸ்லாமிய அரசு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு இஸ்லாமிய நிலங்களில் சோசியலிசம் மற்றும் முதலாளித்துவ சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தின. அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் இஸ்லாமிய சட்டங்களுக்கு பதிலாக இவ்வரசு அமைப்பின் கீழ் செயலாற்றியதால் இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக செயலிழந்து வெறும் ஒரு உபகரண்மாக மட்டுமே உபயோகிக்கப்பட்டது. அவர்களுடைய அரசியல் கண்ணோட்டமானது இஸ்லாத்திற்கு மாறுபட்டதாகும்; அதை நாம் இன்று கண்கூடாக காணலாம். அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதே அவர்களின் அடிப்படை கவலையாக இருக்கின்றது.

கடந்த நூற்றாண்டில் முஸ்லிம் நிலங்களில் அரசியலில் ஈடுபட்டவர்களான முஸ்தபா கமால், முஹம்மத் அலி ஜின்னா, ஜமால் அப்துல் நாசர், அன்வர் சத்தாத், ஜோர்டான் மன்னர் ஹுசைன், யாசர் அராபத், சதாம் ஹுசைன், நவாஸ் ஷரீஃப், பர்வேஸ் முஷாரஃப் மற்றும் பேநசிர் பூட்டோ போன்றோர் இவர்களில் அடங்குவர். இவர்கள் அனைவரும்  இஸ்லாமிய அரசியலை தங்களிடமிருந்து வெகு தொலைவில் வைத்து தங்கள் மக்களின் நலனுக்காக அல்லாமல் மேற்கத்திய சக்திகளின் நலனுக்காக பாடுபடுவதையே தங்கள் குறிக்கோளாக வைத்திருந்தனர். ஜமால் அப்துல் நாசர் போன்றோர் தங்களது தேசத்தை உருவகப்படுத்துகையில்  மிகவும் பலவீனமான அடிப்படையை கொண்ட அரபு தேசியவாதத்தை மையமாக வைத்து தங்களது தேசங்களை உருவாக்க முயன்றனர்.அனைவரும் மேற்கத்திய நாடுகளால் மேற்கத்திய கோட்பாடுகளின் அடிப்படை மூலம் நிறுவப்பட்ட அரசியல் அமைப்பில் ஈடுபட்டனர். இந்த காரணத்தால் இந்த அமைப்பை கொண்ட அரசு மற்றும் அரசியல் அமைப்பில் உள்ள ஒருவர் முஸ்லிம்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்ய இயலாது. காலனியாதிக்கவாதிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளை தங்களுடைய கைக்கூலிகலாக ஆக்கி தங்களின் கோணத்தில் என்றென்றும் நிலைக்கொண்டு இருக்கவும் அவர்களின் வளங்களை சுருட்டுவதையுமே விரும்புகின்றன.

இதன் காரணமாக முஸ்லிம்களை கொண்ட ஒரு குழு இஸ்லாத்தை வாழ்வியல் வழியாக்க் கொண்ட ஒரு சித்தாந்தமாக ஏற்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மீண்டும் ஓர் அரசியல் கட்டத்தை நிலைபெறுமாறும் அதைக் கொண்டு உம்மத்தின் வீழ்ச்சியிலிருந்து திருப்ப அவர்களை பண்படுத்த தொடங்கினர்.

இந்த இஸ்லாமிய பண்படுத்தலின் விளைவை நாம் முஸ்லிம் உலகின் அனைத்து பகுதிகளிலும் மேலும் அதனையும் தாண்டி இப்போது காணலாம். எனினும் கிலாஃபா இன்னும் நிறுவப்படாததன் காரணத்தால் உண்மையான அரசியல் அனுபவம் பெறுவதில் குறைவு உள்ளதை காணமுடிகிறது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் அரசியல் என்பது அதிகாரத்தில் இல்லாதபோது அரசின் குறைகளை எடுத்துரைப்பதும் ஆட்சியில் இருக்கும் போது உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் உம்மத்தின் விவகாரங்களை கவனித்து கொள்வதுமாகும். அவ்வாறு இஸ்லாமிய நாடு இல்லாத போது அந்த கிலாஃபத்தை நிலைபெறச் செய்வதே முஸ்லிம்கள் செய்ய வேண்டிய மிகவும் முக்கியம் வாய்ந்த மற்றும் மிகவும் உயரிய அரசியல் செயல்பாடாகும். இதை தவிர்த்து முஸ்லிம்கள் தற்போது நிலைபெற்றிருக்கும் அரசு வடிவங்களில் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அல்லது உம்மா எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது என்பது மிகவும் உயரிய அரசியல் விவகாரமான கிலாஃபத்தை மறு நிர்மாணம் செய்வதற்கு இடையூறாக அமைந்துவிடும்.

பிரத்தியேக கண்ணோட்டம்

ஒரு முஸ்லிம் அரசியலில் ஈடுபடும் முன் அவருடைய பார்வை மற்றும் அவருடைய கண்ணோட்டத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடில்  மற்றவர்கள் சூழ்ச்சி செய்து தங்களின் திட்டத்திற்கு இவரை உபயோகித்து கொள்வர். ஒருவருடைய மனதில் தெளிவான கோணமும், கண்ணோட்டமும் இல்லாவிடில் அவரை ஒரு பலவீனமான அரசியல் தன்மை உடையவராக ஆக்கிவிடும்; அது அவருடைய குறிக்கோளை விட்டுவிடும் நிலைக்கு இட்டுச் செல்லும்.

இஸ்லாத்தை மையமாக கொண்டுள்ள அரசியல் கண்ணோட்டமானது  மற்றவைகளை விட மாறுபட்ட  தனித்தன்மை வாய்ந்ததாகும்.ஆகவே இதை ஒரு பிரத்யேக கண்ணோட்டமாக விவரிக்கலாம். இந்த பிரத்யேக கண்ணோட்டமானது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு திசை காட்டியாக சரியான அரசியல் செயல்பாடுகளை அமைக்க உதவுவதோடு அவரை சரியான திசை நோக்கி  கொண்டு செல்லும்.

இந்த பிரத்யேக கண்ணோட்டமானது அவர்களின் இச்சைகளின் படியோ அல்லது அவர்களின் ஆசைகளின் படியோ இருக்கக் கூடாது.மாறாக இது அவர்களின் ஆகீதாவிலிருந்து வரவேண்டும். இஸ்லாமிய மூல ஆதாரங்கள் மூலமாக நிறுவப்பட்ட விஷயம் என்னவெனில், இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாக வந்ததாகும். மேலும் அதனுடைய கண்ணோட்டமானது லாஇலாஹா இல்லல்லாஹ் என்பதை நோக்கியே அனைத்து செயல்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும். அதாவது ஷரீஆ சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய சித்தாந்தத்தை பற்றிய புரிந்துணர்வே ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு நடப்புகளை காணும் கண்ணாடியாக இருக்க வேண்டும்.

சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்த ஒரு முஸ்லிமின் பிரத்தியேக கண்ணோட்டத்தை இஸ்லாம் மற்றும் அதன் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்குவது அவசியமாகும்.அக்கண்ணோட்டம் முதலாளித்துவ்வாதிகளைப் போல ஆதாயம் மற்றும் உபயோகம் போன்ற காரணங்களை கொண்டு உருவாக்கியதை போன்று இருக்கக்கூடாது. இது அந்த தனி மனிதன், அமைப்பு மற்றும் நாட்டின் அரசியலை மாசுபடுத்தி விடும். வேறுபட்ட அரசியல்வாதிகளின்  எதற்கு, எங்கு மற்றும் அவர்களின செயற்குறிப்புகளை புரிந்துகொள்வது மட்டும் ஒருவர் சிறப்பாக அரசியல் புரிய போதாது

இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டத்தை அமைத்தல்

சாதாரண சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் பிரத்தியேக கண்ணோட்டத்தை அமைப்பதென்பது ஒரு சாதாரணமான விஷயமாக இருக்கும். இஸ்லாம் நாட்டிலும் சமூகத்திலும் நடைமுறைப்படுத்தும் போது சமூகத்தில் இஸ்லாமிய சித்தாந்தம் சிறந்த முறையில் நிலைநாட்டப்பட்டிருக்கும். அதுவே தனி மனித வாழ்விலும் பிரதிபலிக்கும். முஸ்லிம் சமூகம் இன்று எதிர்கொள்ளும் இழிகேடான சூழ்நிலை என்னவென்றால், சமூகங்கள் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு அமைக்காமல் அவைகள் கலப்படமான உணர்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல்வாதிகள்  ஒரு குழப்பமான கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசியல் என்பது மக்களின் விவகாரங்களை பார்த்து கொள்வது என எப்போதும் விவரிக்கப்படுகிறது. அதன் அர்த்தமானது அரசியல்வாதிகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுவது, மக்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதாகும். இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் உம்மா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.முஸ்லிம் உலகில் ராணுவ, அரசியல் மற்றும் கலாச்சார ஆக்கிரமிப்பு, பசி, பட்டினி, பற்றாக்குறையான கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவத்திற்காக செலவு செய்ய முடிந்தவர்களுக்கு கூட சேவை அளிக்க செயலற்று கிடக்கும் சுகாதார அமைப்பு போன்றவையே உலகெங்கிலும்  பெருவாரியான முஸ்லிம்களுடைய நிலையாக இருக்கின்றது. இதை கருத்தில் கொண்டால் – தனி மனிதர்கள் இப்பிரச்சினைகளை சரி செய்ய முனைவது இயற்கையானதாகும்.

மக்களின் இச்சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்காக உள்ளார்ந்த நோக்கில் தங்கள் சேவையை தொடங்கிய பலர் அதிகப்படியான நேரங்களில் ஊழலுக்கு ஆட்பட்டு இன்றைய முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களுக்கு கருவிகளாக மாறிவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் உலகின் சில பகுதிகளில் மக்களுக்கு ஏதாவது  செய்ய முயல்வது தடைசெய்யப்பட்டதாக கருதப்படுகிறது,  இவ்வகையான செயல், பேச்சு அல்லது சிந்தனை தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதால் பெரும்பாலான சமயங்களில் சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் போன்ற தண்டனைகளை பெற்றுத்தரக்கூடியதாக அமைந்து விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பல அரசியல் இயக்கங்கள் வந்தும் சென்றும் இருக்கின்றன; அல்லது அதை நிர்மாணித்தவர்களின் நோக்கத்திலிருந்து வெகுவாக மாறுபட்டு வேறொன்றாக பரிணாமம் அடைய செய்திருக்கிறது.

முஸ்லிம்கள் மக்களின் நிலையை அல்லது தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்கும் முன் அவர்கள் ஈடுபடவிருக்கும் காரியத்தை பற்றிய அவர்களுக்கான ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அமைத்திருப்பது அவசியமாகும்.

இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டத்தை அமைப்பது கட்டாயமாகும்.

ஒரு முஸ்லிம் தன் வாழ்வை இஸ்லாமிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அமைத்துக்கொள்கிறார் – இதுவே அவர் ஈடுபடும் அரசியலுக்கும் அடிப்படையாக அமையும்.ஆகவே அவருடைய அரசியல் கண்ணோட்டமானது இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய சரியான புரிந்துணர்வு கொண்டிருப்பதும் அவசியமாகும். அவர் இப்போதுள்ள யதார்த்த நிலைகள் மற்றும் நிகழ்வுகளை இதன் அடிப்படையிலேயே காணவேண்டும்.

எடுத்துக்காட்டாக சில முஸ்லிம்கள் தற்போதுள்ள அரசில் பங்கு கொள்வதன் மூலம் மட்டுமே இஸ்லாத்தை நிலைநாட்ட முடியும் என கோருவது, மற்றும் இதன் மூலம் இன்றைய யதார்த்த நிலையில் இஸ்லாத்தின் சில பகுதிகளை நிலைநாட்டுதலில் வெற்றி பெற்றிருப்பதாக பறைசாற்றுவதன் மூலம் அவர் இஸ்லாமிய அகீதாவில் அடிப்படையாக கொண்டுள்ள புரிந்துணர்வை நிராகரித்து விடுகிறார். ஏனென்றால் இஸலாத்தை பகுதியாகவோ படிப்படியாகவோ நிலைநாட்டுவதென்பது கூடாத ஒன்றாகும்.மேலும் குஃப்ரிய அமைப்புடன் இஸ்லாமிய அமைப்பு ஒருங்கிணைந்திருப்பது கூடாது. இதுவே இஸ்லாமிய கொள்கையை புரிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படையாகும்.இதுவே குறப்பிட்ட விஷயத்தில் இஸ்லாமிய அரசியல்வாதிக்கு சரியான கோணத்தை அமைக்க வழிவகுக்கும்.

وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ

இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக;   (அல் மாயிதா: 49)

இதைப்போன்று ஒருவேளை மற்றவர்கள் ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு  நன்மையை கொண்டு செல்வதற்கான வழி என்று கோருவார்களேயானால் – ஜனநாயகம் குஃப்ரிய தன்மையுடையதாலும் மேலும் அது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாக இருப்பதாலும் அவர் அந்த அழைப்பை நிராகரித்து விடவேண்டும்.

إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ

அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை.
(யூசுஃப் : 40)

சிலர் கிலாஃபா என்பது யதார்த்த நிலையிலிருந்து வெகுதொலைவில் உள்ளது எனவும் அதை சீக்கிரத்தில் நிறுவுவது இயலாது எனவும்,அதேவேளையில் நாம் நம் பகுதியில் உள்ள தனி நபர்களுக்கு உதவி புரிவது போன்ற உடனடி நோக்கத்திற்காக பாடுபட வேண்டும் எனவும் கோருகின்றனர். ஒருவேளை அவருடைய கண்ணோட்டம் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் உருவாகியிருந்தால் அந்த நபர் சமூகத்தில் உள்ள தனிநபர்களுக்கு உதவும் செயல் ஸதக்காவை சார்ந்ததாகும். அந்த அமலுக்கு அல்லாஹ் سبحانه وتعالى கூலி வழங்குவான் என்பதை புரிந்து கொண்டிருப்பார். மாறாக அவருடைய கண்ணோட்டம் சரியான வகையில் அமைந்திருக்குமேயானால், கிலாஃபத்தை மறு நிர்மாணிப்பதற்கான செயலே மிகவும் முன்னுரிமை பெற்றுள்ளதாக அவருக்கு உணர்த்தும். அவர் கிலாஃபத்தை நிர்மாணிப்பதை வெகுதொலைவில் உள்ளதா இல்லையா என்பதை பற்றி பரிசீலனை செய்யமாட்டார்.  இதன் அடிப்படையில் சரியான அரசியல் கண்ணோட்டத்தை அமைக்க இஸ்லாமிய கொள்கையை பற்றிய சரியான புரிதல் இருப்பது இன்றியமையாததாக இருக்கிறது.

فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰ أَنْ يَكُونَ قَرِيبًا

அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக             (அல் இஸ்ரா,:51)

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விழையும் நபர்களிடம் இஸ்லாமிய கொள்கை பற்றிய அடிப்படையான புரிதல் அவர்களின் மனதில் பலவீனமாக இருந்தால், அவர்கள் அரசியல் அமைப்பிலிருந்து திசைமாறவும் சிலசமயங்களில் முற்றிலும் அரசியலை விட்டுச்செல்வதும் எளிதாக இருக்கும். ஆகையால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் தங்களை பக்குவப்படுத்தி கொள்ள விடாமுயற்சி செய்யவேண்டும். அவ்வாறு இல்லாதபோது முதல் தடங்களிலேயே அவர்கள் தடுமாற நேரிடும். ஒரு முஸ்லிமின் அரசியல் கண்ணோட்டம் எப்போதும் இஸ்லாமிய கொள்கையில் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து அவர் எக்காலத்திலும் திசை மாறுவது கூடாது. முஸ்லிமானவர் முதலில் தனக்கான ஒரு பார்வையை உருவாக்கவேண்டும் அதாவது அவருடைய கருத்தாக்கம் எதைக்கொண்டு பார்ப்பதென்பதும், பின்னர் அவரை சுற்றி ஏற்படும் உலக நிகழ்வுகள், செயல்கள் பற்றிய புரிந்துணர்வை உருவாக்குவதுமாகும். அதன் பின்னர் அவருடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – அது இன்று உம்மத்தை மறுமலர்ச்சி அடைய செய்வதிலும் மற்றும் கிலாஃபத்தை மறுநிர்மாணம் செய்வதை மையமாகக் கொண்டும் இருப்பது கட்டாயக் கடமையாகும்.